டெல்லி: இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவார்கள் என சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சக்தி குழுமமும், ஆஸ்திரியாவின் டயமண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து 200 பயிற்சி விமானங்களை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது.
இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் கூறியதாவது:- இந்தியாவில் தற்போது 800-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமான நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், மேலும் 1,700 விமானங்களை வாங்க விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் காரணமாக, விமானப் போக்குவரத்துத் துறை கணிசமாக விரிவடைய உள்ளது. ஆனால், தற்போது இந்தியாவில் 6,000 முதல் 7,000 விமானிகள் மட்டுமே உள்ளனர்.

எனவே, அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படும். உலகில் வேகமாக வளர்ந்து வரும் விமானச் சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. இந்நிலையில், இந்தியாவை விமானப் பயிற்சி மையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக விமானப் போக்குவரத்துத் துறைக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை மத்திய அமைச்சகம் உருவாக்கி வருகிறது.
38 விமானப் பயிற்சி நிறுவனங்களின் (FTOs) பல்வேறு அம்சங்களையும் அதிகாரிகள் சரிபார்த்து வருவதாகவும், இந்தப் பயிற்சி நிறுவனங்கள் தரப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.