பொதுவாக, ரயில் பயணம் என்பது மகிழ்ச்சியான அனுபவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரயில் பயணங்களின்போது மக்கள் மறக்க முடியாத பல நினைவுகளை உருவாக்குகிறார்கள். மேலும், ரயில் பயணம் உலகெங்கிலும் மிக பழமையான பயண முறைகளில் ஒன்றாகும். இந்திய ரயில்வே பயணிகளுக்கு அவர்களின் பயணத்திற்காக பல விருப்பங்களை வழங்கியுள்ளது. அதாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், கரிப் ரத் எக்ஸ்பிரஸ், தேஜாஸ் எக்ஸ்பிரஸ் போன்றவை இதில் அடங்கும்.

இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் எப்போது இயக்கப்பட்டது மற்றும் எந்த நகரத்தில் இயங்கியது என்று உங்களுக்கு தெரியுமா? மும்பையில் போரி பந்தரில் இருந்து தானே வரை ஏப்ரல் 16, 1853 அன்று முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இந்த வரலாற்று ஓட்டம் இந்தியாவில் ரயில் சேவைகளின் தொடக்கத்தை காட்டியது. அதன் பின்னர் இது உலகின் நான்காவது பெரிய ரயில் வலையமைப்பாக வளர்ந்துள்ளது. இந்தியாவில் இயங்கும் பழமையான பயணிகள் ரயில் பற்றி பார்த்தால், ஹவுரா-கல்கா மெயில் 158 ஆண்டுகளுக்கு முன்பு தனது சேவையைத் தொடங்கியது.
இந்த ரயில் மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஹவுராவை ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள கல்கா நகரத்துடன் இணைக்கிறது. ஹவுரா மற்றும் டெல்லிக்கு இடையே ஜனவரி 1, 1866 அன்று முதன்முதலில் இயக்கப்பட்ட ரயில் ஹவுரா-பெஷாவர் எக்ஸ்பிரஸ் ஆகும். பின்னர் 1891ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து கல்கா வரை நீட்டிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் கால ரயிலான ஹவுரா-கல்கா மெயில், ஆரம்பத்தில் கொல்கத்தாவிலிருந்து சிம்லா வரை பயணிக்க ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில், ரயிலின் பெயர் மூன்று முறை மாற்றப்பட்டது. முதலில் கிழக்கு இந்திய ரயில்வே மெயில் என்று அழைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கல்கா மெயில் என்றும், நேதாஜி எக்ஸ்பிரஸ் என்றும் பெயர் மாற்றப்பட்டது.