கோல்கட்டா: பா.ஜ., வெற்றி பெற்ற பிறகு முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களை மேற்குவங்க சட்டசபையில் இருந்து வெளியேற்றுவோம், என பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறினார்.
மேற்கு வங்க சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ஜ., அளித்த ஒத்திவைத்து தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார். இதனை கண்டித்து சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன் பிறகு சுவேந்து அதிகாரி கூறியதாவது: கடந்த நான்கு முதல் ஐந்து நாட்களில், தம்லுக் தொகுதியில் சில பகுதிகளில் ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சிலைகள் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. முர்ஷிதாபாத்தின் நவாடா மற்றும் உலுபெரியா மாவட்டத்தில், ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர். ஹிந்து கடை உரிமையாளர்கள் மற்றும் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
உலுபெரியாவில், சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள் தாக்கப்பட்டனர். இது குறித்து சட்டசபையில் பேச அனுமதிக்கப்படவில்லை. இது சட்டவிரோதமானது. இது மேற்கு வங்க மக்களின் குரலை நெரிக்கும் நேரடி முயற்சி.
சபாநாயகர் பிமன் பந்தோபாத்யாய் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜியை நாங்கள் தோற்கடிப்போம். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, திரிணமுல் கட்சியின் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களை அவையிலிருந்து வெளியேற்றுவோம், என சுவேந்து அதிகாரி கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்த முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: “நான் ஒரு ஹிந்து, இதற்கு பா.ஜ., எனக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டியதில்லை. ஒருவர் ஹிந்துவோ, சீக்கியரோ, புத்தமோ, முஸ்லிமோ, கிறிஸ்தவரோ, ஒரு முதல்வராக, அவர்கள் அனைவரையும் அரவணைப்பது என் பொறுப்பு. என்னோடு ஹிந்து கார்டு வைத்து விளையாடாதீர்கள்,” என்று முதல்வர் மம்தா பதில் கூறியுள்ளார்.