உங்களது வீட்டில் காலிஃப்ளவர் இருக்கிறதா? காலிஃப்ளவர் இருந்தால், அதை பெரும்பாலும் ப்ரை செய்யவோ அல்லது குருமாவாக செய்தோ சாப்பிடுவீர்கள். அப்படியானால் அடுத்த முறை காலிஃப்ளவர் வாங்கினால், அதைக் கொண்டு கட்லெட் கிரேவி செய்யுங்கள். இந்த காலிஃப்ளவர் கட்லெட் கிரேவி சப்பாத்தி, தோசை, இட்லி, பூரி, சாதம் என அனைத்துடனும் சாப்பிட அருமையாக இருக்கும். இந்த கிரேவி செய்வதற்கு சற்று நேரம் எடுத்தாலும், சுவை மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

இந்த காலிஃப்ளவர் கட்லெட் கிரேவி செய்முறை சுலபமாகவும் சுவையாகவும் உள்ளது. முதலில், காலிஃப்ளவர் பூக்களை வெட்டி, சுடுநீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்புடன் 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு, மிக்சர் ஜாரில் சோம்பு, சீரகம், கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு, அதே ஜாரில் ஊற வைத்த காலிஃப்ளவரை சேர்த்து லேசாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன் மசாலா, உப்பு, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து, கடலை மாவு சேர்த்து பிசைந்து கட்லெட் வடிவத்தில் தட்டி ஒரு தட்டில் வைத்து கொள்ள வேண்டும்.
பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கட்லெட்டுகளை பொரித்து, பொன்னிறமாக வரியடுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காய விழுதை சேர்த்து வதக்கி, பச்சை வாசனை போக வைக்க வேண்டும்.
பின்பு, அரைத்த தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அதன்பின், மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சிக்கன் மசாலா சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். இப்போது தேவையான அளவு நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியாக, ப்ரை செய்து வைத்த கட்லெட்டுகளை சேர்த்து, மூடி வைத்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தூவினால் சுவையான காலிஃப்ளவர் கட்லெட் கிரேவி தயார்.