அமராவதி: வெள்ளிக்கிழமை, ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரம் தொகுதியில் தனது கட்சியின் 12 வது ஆண்டு விழாவில் தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றினார். “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. இது தேசத்திற்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்திற்கும் பொருந்தும். ஹிந்தியை எதிர்க்கும் தமிழகம் தமிழ் படங்களை பிற மொழிகளில் டப் செய்யக்கூடாது.
இருப்பினும், தமிழ் படங்கள் நிதி ஆதாயத்திற்காக பல மொழிகளில் டப் செய்யப்படுகிறது. சனாதன தர்மம் என் இரத்தத்தில் உள்ளது. அதை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது. நான் இந்து மதத்தின் பாதுகாவலன். ஜனசேனா மத சுதந்திர விஷயத்தில் வாக்கு வங்கி அரசியல் செய்யவில்லை. எந்த மதத்தின் மீது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கப்பட வேண்டும். எங்கே தவறு செய்தாலும் அது தவறுதான்.

நாட்டை வடக்கு, தெற்கு எனப் பிரிக்க யாருக்கும் தைரியம் இல்லை. இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், என்னைப் போன்றவர்கள் அதைத் தடுக்க முன்வருவார்கள். சமூக மாற்றத்திற்காக அரசியலுக்கு வந்துள்ளேன். ஜனசேனா பல சவால்களை கடந்து இந்த நிலையை எட்டியுள்ளது.
2019-ல் நாங்கள் தோற்றபோது, எங்களை கேலி செய்தார்கள். எங்களை சட்டப் பேரவை வாசலுக்குக் கூட நெருங்க விடமாட்டோம் என்று சவால் விட்டார்கள். இன்று எங்களிடம் 21 எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள் உள்ளனர். நாங்கள் பயப்படவில்லை” என்று பவன் கல்யாண் கூறினார்.