சென்னை: சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் செங்கோட்டையன் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்றது பரபரப்பாகியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்குவதற்கு முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு சென்றபோது செங்கோட்டையன் அங்கு செல்லவில்லை. அதைத் தொடர்ந்து நேற்று சட்டசபையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டபோதும் செங்கோட்டையன் அமைதியாக அமர்ந்திருந்தார். இந்நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏக்கள் அறைக்கு செல்லவில்லை.

அ.தி.மு.க., தனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததையடுத்து, செங்கோட்டையன், சபாநாயகர் அறைக்கு சென்று, அவரை தனியாக சந்தித்து, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட செங்கோட்டையன், சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்றார். எடப்பாடியை புறக்கணித்து செங்கோட்டையன் தனித்து செயல்படுவதால் அதிமுகவில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.