சிவகாசி : இறந்த கால்நடைகளின் இறைச்சியை உண்பதால் ஆந்தராக்ஸ் நோய் பரவும் என்றும், அதன் சடலத்தை ஆழமாக தோண்டி சுண்ணாம்பு பூசி புதைக்க வேண்டும் என கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கால்நடைகளை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்றான ஆந்த்ராக்ஸ் மிகவும் முக்கியமானது. இந்த நோய் ஆந்த்ராக்ஸ் எனப்படும் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியா நுண்ணுயிரிகளால் பரவும் ஒரு தொற்று நோயாகும்.
இந்த நோய் ஆடு, மாடு, வன விலங்குகள் மற்றும் மனிதர்களை பாதிக்கிறது. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது:- இந்நோய் தாக்கிய கால்நடைகள் திடீரென இறக்கின்றன. இறந்த கால்நடைகளின் வாய், மூக்கு மற்றும் ஆசனவாயில் அடர் சிவப்பு நிறத்தில் உறையாமல் ரத்தம் வெளியேறும். இறந்த கால்நடைகளின் வயிறு மிகவும் வீங்கி இருக்கும். நோய் கிருமிகள் கலந்த தீவனம் மற்றும் தண்ணீரை உட்கொள்வதால் நோய் பரவுகிறது.

எக்காரணம் கொண்டும் இறந்த மாடுகளை அறுத்து உண்ணக் கூடாது. இறந்த கால்நடைகளை ஆழமான குழியில் புதைத்து சுண்ணாம்பு போட்டு மூட வேண்டும். இறந்த கால்நடைகள் காணப்படும் மண்ணில் ஃபார்மலின் கரைசலைக் கலக்க வேண்டும். கால்நடைகளுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்ட பிறகு சிகிச்சை அளிப்பது மிகவும் குறைவு.
எனவே, கால்நடைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை அடைப்பான் நோய் தடுப்பூசி போட வேண்டும். இறந்த மாடுகளை அறுத்து தோலுரிப்பவர்கள் மூலம் மற்ற மனிதர்களுக்கு இந்நோய் தாக்கும். நோய் தாக்கி இறந்த கால்நடைகளின் இறைச்சியை உண்பவர்கள் நோய் தாக்கி இறக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.