திண்டுக்கல் ரயில் நிலையத்தில், திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த நவநீதகிருஷ்ணன் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் வெளிநாட்டு பணத்தை மாற்றிய பிறகு கன்னியாகுமரிக்கு செல்வதாக இருந்த அவர், போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

கஞ்சா கடத்தல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீசார் ரயிலில் சோதனை செய்தபோது, அவர் தப்ப முயன்றதை கண்டு சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் மேற்கொண்ட சோதனையில், ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ₹13.76 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நவநீதகிருஷ்ணன் வெளிநாட்டு பணத்தை சென்னை சென்று மாற்றியதை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, கைப்பற்றப்பட்ட பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து, வழக்கை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு மாற்றினர். அவர்கள் தற்போது நவநீதகிருஷ்ணனிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.