மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கபார்டை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய விவாதங்களை நடத்தினர். டெல்லியைச் சேர்ந்த ‘அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன்’ என்ற சிந்தனைக் குழுவால் ஆண்டுதோறும் ‘ரைசினா உரையாடல்’ உச்சி மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டுக்கு வெளியுறவு அமைச்சகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. 2016-ம் ஆண்டு முதல் ‘ரேசினா டயலாக்’ உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டுக்கான 3 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட 125 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உட்பட 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். ரஷ்யா, உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

‘ரேசினா டயலாக்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கபார்ட் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி வந்தார். துளசி கபார்ட் நேற்று டெல்லியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இருவரும் பரஸ்பரம் உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது, கூட்டுப் போர்ப் பயிற்சி, ஆயுதங்கள் வழங்குதல் குறித்தும் விவாதித்தனர். அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க துளசியிடம் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என துளசி உறுதியளித்தார்.
துளசி கபார்ட் பிரதமர் நரேந்திர மோடியையும் நேரில் சந்திக்க உள்ளார். இந்தியாவைத் தொடர்ந்து ஜப்பான், தாய்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தின் போது, தென் சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.