சென்னை: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலுங்கானாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 29 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தெலுங்கானாவில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநில காங்கிரஸ் அரசு, கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் சட்டம் இயற்றியுள்ளது.
அடுத்தகட்டமாக, பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீட்டை மூன்றாகப் பிரித்து உள்ஒதுக்கீடு வழங்க தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. தெலுங்கானாவில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பும், அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு அதிகரிப்பும் உண்மையிலேயே ஒரு சமூக நீதிப் புரட்சி. தெலுங்கானா அரசு இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பிய சட்டங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட பிறகு இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். அதுவும் சாத்தியமானால், அது சரித்திரம்.

தமிழகத்திலும் ஆட்சி இருக்கிறது. சமூகநீதியைப் பாதுகாப்பதற்காகவே அது உருவானதாக அது அடிக்கடி கூறுகிறது; இதற்கான விளம்பரங்களை வெளியிடுகிறது. ஆனால், அந்த அரசு சமூக நீதிக்காக ஒரு சிறு பைசா கூட ஒதுக்கவில்லை. ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினால், அதற்கு அதிகாரம் இல்லை என்று கை விரித்து விடும். இதுதான் தமிழக ஆட்சியாளர்களுக்குத் தெரிந்த சமூக நீதி. ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை எந்த மாநிலத்திலும் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பலமுறை கூறியுள்ளன.
மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் உள்ளது. பீகார் மற்றும் தெலுங்கானாவில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதெல்லாம் தமிழக அரசுக்கும் தெரியும்; ஜாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்பது தமிழக ஆட்சியாளர்களுக்கும் தெரியும்.
ஆனால், அதைச் செய்ய மாட்டார்கள். காரணம்… அவர்கள் தூங்கவில்லை, தூங்குவது போல் நடிக்கிறார்கள். சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை நீண்ட காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. இதை தமிழக அரசு உணர வேண்டும். தமிழகத்திலும் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி காக்கப்பட வேண்டும். இல்லையெனில் தமிழக ஆட்சியாளர்களுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்,” என்றார்.