வாஷிங்டன்: உக்ரைனுடனான போரில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மூன்று ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு, சவுதி அரேபியாவில் அந்நாட்டின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ரஷ்யா 30 நாள் போர் நிறுத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் அதன் முடிவை அது அறிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, நேற்று ரஷ்ய அதிபர் புடினுடன் டிரம்ப் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில், இரு நாடுகளும் ஒரு அறிக்கையை வெளியிட்டன. அமெரிக்காவின் கூற்றுப்படி, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை 30 நாட்களுக்கு நிறுத்த ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கூடுதலாக, இரு நாடுகளும் தலா 175 போர்க் கைதிகளை பரிமாறிக்கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளன. நல்லெண்ண நடவடிக்கையாக கடுமையாக காயமடைந்த 23 உக்ரைன் வீரர்களை ரஷ்யா உக்ரைனிடம் ஒப்படைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றில் முழுமையான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.