நடிகை சோனா தனது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘ஸ்மோக்’ என்ற வெப் சீரிஸை இயக்கியுள்ளார். ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் இந்த வெப் தொடருக்கு எதிராக பலர் கடுமையாக எச்சரித்ததாகவும், மேலும் பல அவமானங்களை சந்தித்ததாகவும் சோனா முன்பு கூறியிருந்தார். இந்நிலையில், தனது வெப் சீரிஸின் ஹார்ட் டிஸ்க்கை ஷங்கர் என்ற மேலாளர் எடுத்துச் சென்றதாகக் கூறி நடிகை சோனா நேற்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் (PEPSI) அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “25 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். ஆனால் என்னை 10 வருடமாக வேலை செய்ய விடவில்லை.ஒருகட்டத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் ஒப்பந்தம் செய்து, ‘ஸ்மோக்’ என்ற வெப் சீரிஸை இயக்க நான் பூஜை செய்த நாளில் இருந்து என்னை துன்புறுத்த ஆரம்பித்தார்கள். எங்களுக்கு சங்கர் என்று ஒரு மேலாளர் இருந்தார். படப்பிடிப்பில் பணிபுரிந்தவர்களின் 5 நாள் சம்பளத்தை என்னிடம் இருந்து பெற்றுக்கொண்டு அவர்களிடம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். அப்போது வெப் சீரிஸ் படப்பிடிப்பு காட்சிகள் அடங்கிய இரண்டு ஹார்ட் டிஸ்க்குகளை கேமரா யூனிட் ஆட்களிடம் கொடுத்தார்.
இதுகுறித்து பெப்சி மற்றும் மேலாளர்கள் சங்கத்திடம் புகார் அளித்தேன். முதலில் பேசி தீர்வு காண்போம் என்று கூறிவிட்டு, ‘ஆமாம். அவர் ஏமாற்றினார். ஆனால் அவர் கொடுக்க மாட்டார். இதற்கு என்ன காரணம்? எனக்கு தெரியாது. ஒரு வழியாக வெப் சீரிஸ் முடித்துவிட்டு வந்து மீண்டும் ஹார்ட் டிஸ்க் கேட்டால் தர மறுத்து தரக்குறைவாகப் பேசுகிறார்கள். அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அது தெரிந்தும் ஏன் எல்லோரும் அவருக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்று தெரியவில்லை, வேறு என்ன செய்வது என்று தெரியாமல் பெப்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்துகிறேன்.