சென்னை: தமிழகத்தில் 153 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை நிலை சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் நேற்று வெளியிட்ட அறிக்கை:- சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மூலம் சிறுபான்மை அந்தஸ்து பெறுவதை எளிதாக்கவும், விரைவுபடுத்தவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், 2023-ம் ஆண்டு முதல், தலைமை செயலகத்தின் தலைமைக் குழுவின் ஒப்புதலுடன், சிறுபான்மை நிலை சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மத சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு 2024 முதல் நிரந்தர சான்றிதழ் வழங்கப்படுகிறது. கடந்த 11-ம் தேதி நடந்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் 7-வது கூட்டத்தில் 160 கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 153 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்துறை மூலம் இதுவரை 312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை நிலை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில் 246 பேருக்கு நிரந்தர அந்தஸ்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.