கோடை பருவத்தில், சுற்றுலா இடங்கள் நிரம்பி வழியும். இந்த நேரத்தில், கடுமையான வெப்பம், அதிகமான ஹ்யூமிடிட்டி மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் சிலருக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுத்தலாம். கோடைக் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது, அதனை தவிர்க்காமல் இருந்தால் உடல் டிஹைட்ரேஷன், ஃபுட் பாய்ஸன் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ள முடியும்.

நீர்ச்சத்து இழப்பு (டிஹைட்ரேஷன்)
கோடை பருவத்தில் அதிகமான வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக உடலில் இருந்து நீர் மற்றும் தாதுக்கள் வெளியேறும். இதனால், நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். டிஹைட்ரேஷன் என்பது தலைவலி, சோர்வு மற்றும் சரும வறட்சியை ஏற்படுத்தும். இதை தவிர்க்க, தாகம் இல்லாவிட்டாலும் மாறும் இடைவெளியில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உங்களுக்கு ஏற்படும் டிஹைட்ரேஷனை தவிர்க்க, தர்பூசணி, வெள்ளரி மற்றும் ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்க்கவும்.
சரும பிரச்சனைகள்
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதால் வியர்வை சுரப்பிகள் அடைபடுவது, ஹீட் ரேஷஸ் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதிகமாக வெயிலில் இருப்பதால் சூரிய ஒளி சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, வெளியே செல்லும் முன் SPF 30 அல்லது அதற்கு மேலான சன்ஸ்கிரீனை தடவுவது அவசியம். குளிர்ந்த நீரில் குளித்து, சருமத்தில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது சிறந்தது.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs)
தூய்மையான நீர் பருகாதது மற்றும் அதிகமான வியர்வை காரணமாக சிறுநீர்பாதையில் பாக்டீரியா குவிய வாய்ப்பு அதிகரிக்கின்றது, குறிப்பாக பெண்களுக்கு இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க, நிறைய தண்ணீர் குடிக்கவும், சுகாதாரத்தை பராமரிக்கவும், பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள்.
ஃபுட் பாய்ஸனிங்
கோடை பருவத்தில், உணவுகளில் பாக்டீரியா அதிகரிக்கின்றன, இதனால் ஃபுட் பாய்ஸனிங் ஏற்படும். மாசுபட்ட உணவுகள் குமட்டல், வாந்தி, வயிற்றுப் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, புதியதாக சமைத்த வீட்டு உணவுகளை மட்டும் உண்ணவும், தெரு உணவுகளை தவிர்க்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி சாப்பிட வேண்டும்.
ஹீட் ஸ்ட்ரோக்
தீவிர வெப்பநிலைகளில் நீண்ட நேரம் இருப்பது, வெப்பச் சோர்வு ஏற்படுத்தும். இதனால் தலைச்சுற்றல் மற்றும் அதிக வியர்வை ஏற்படும். இது, அதிக வெப்பத்தில் உடல் குளிர்ச்சியடையும் திறனை இழக்கும் ஹீட் ஸ்ட்ரோக்காக மாறக்கூடும். இது ஒரு ஆபத்தான நிலை, எனவே, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம். வெளியே செல்லும்போது தொப்பி, சன்கிளாஸ், வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள்.