இந்திய மக்களிடையே தங்கம் குறித்த ஆர்வம் உலகெங்கும் உள்ள மக்களைவிட மிகவும் அதிகமாக இருக்கிறது. திருமண நிகழ்வுகள் மற்றும் சிறப்பு தினங்களில், இந்திய பெண்கள் தங்க நகைகளை அணிய மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். இதனாலேயே இந்தியாவில் தங்கம் விற்பனை பெரிதாக நடைபெறுகிறது. தங்கம், அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியமான பொருளாக மாறியுள்ளது.

மருத்துவம் மற்றும் கல்வி போன்ற அவசர தேவைகளுக்காக தங்க நகைகளை விற்பனை செய்யவோ அல்லது அடகு வைக்கவோ முடியும். இதன் காரணமாகவே இந்திய மக்கள் தங்கத்தை வாங்க விரும்புவார்கள். இந்நிலையில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களில், யாரும் எதிர்பார்க்காத வகையில், ஒரு சவரனின் விலை 10,000 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இதனால், திருமணம் மற்றும் சிறப்பு நாட்களுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சில வாரங்களாக, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில், கடந்த நாள் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து, 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ. 68,480-க்கு விற்பனை செய்யப்பட்டு, கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 8,560-க்கு விற்பனையாகிறது.
ஆனால் இன்று, தங்கத்தின் விலையானது சரிவடைந்துள்ளது. ஒரு கிராமின் விலை 160 ரூபாய் குறைந்து ரூ. 8,400-க்கு விற்பனையாகியுள்ளது. அதேபோல், ஒரு சவரனின் விலை ரூ. 1,280 குறைந்து ரூ. 67,200-க்கு விற்பனையாகியுள்ளது. திடீரென குறைந்த தங்கம் விலை காரணமாக, நகைப்பிரியர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள்.