கேரளாவில், இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், கொச்சி மினரல்ஸ் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கின்றது.

முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா, பெங்களூரை தலைமையிடமாக வைத்து ‘எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் கணக்குகளை வருமான வரித்துறை பரிசோதித்தபோது, ‘கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூடைல்’ என்ற நிறுவனம் 1.72 கோடி ரூபாய் செலுத்தி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் எக்சாலாஜிக் நிறுவனம் அந்த பணத்திற்கு எந்த சேவையும் கொச்சி மினரல்ஸுக்கு வழங்கவில்லை என கூறப்பட்டது.
இதையடுத்து, மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத் துறையின் விசாரணைப் பிரிவான தீவிர மோசடி விசாரணை அலுவலகம், எக்சாலாஜிக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத் துறையில் புகார் அளித்தது. அந்த புகாரை ஏற்ற அமலாக்கத்துறை, எக்சாலாஜிக் நிறுவனமும், அதன் நிர்வாகியான வீணா மற்றும் பலரையும் சட்டவிரோத பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் 25 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் வீணா மற்றும் அவரது நிறுவனங்கள் ரூ.2.73 கோடி வரை சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.