திருப்பதி: ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) மூன்றாவது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் உள்ளிட்ட எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு மூன்றாவது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏவுதளம் ரூ. 3,984.86 கோடியில் அமைக்கப்படவுள்ளது. 90 மீட்டர் உயரமும், அதிகபட்சமாக 1,000 டன் எடையும் கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் திறனுடன் இது அமைக்கப்பட உள்ளது. இந்த ஏவுதளத்தின் கட்டுமானப் பணிகள் 4 ஆண்டுகளில் நிறைவடையும். தற்போதுள்ள ஏவுதளங்களால் 1,000 டன் எடையுள்ள ராக்கெட்டுகளை ஏவ முடியாது என்பதால் மூன்றாவது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.