சென்னை: இதுகுறித்து, அனைத்து மீனவர் சங்கத் தலைவர் நாஞ்சில் பீ.ரவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:- சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் டீசலை, 800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் டீசல் பெற மீனவர்கள் செல்லும் தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகம், ஏடிஎம் டெபிட் கார்டு, ஜிபே, கூகுள் பே போன்றவற்றை பயன்படுத்தி மீனவர்களின் வங்கி கணக்கு பரிவர்த்தனை மூலம் டீசல் பெற முடியவில்லை.

இதற்கு காரணம், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஸ்வைப்பிங் இயந்திரம் பழுதடைந்து, ஒரு மாதத்திற்கு மேலாகியும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரி செய்யாதது தான். இதனால் மீனவர்கள் மின்னணு வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், கடந்த ஒரு மாதமாக மீனவர்களிடம் இருந்து பல கோடி பணத்தை பெற்றுக்கொண்டு இதில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, தமிழக மீன்வளத்துறை அமைச்சர், மீன்வளத்துறை செயலர், ஆணையர், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழக பொதுமேலாளர் ஆகியோர் இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தி இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.