சென்னை: பழனியில் நடைபெற உள்ள சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு வரும் முருக பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடம், போக்குவரத்து வசதி, மாநாட்டு நெறிமுறை வெளியீடு, ஆய்வு கட்டுரைகள் தேர்வு என பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், ”முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ், ஹாங்காங், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. இதற்கென அமைக்கப்பட்ட குழுவின் மூலம் இந்த ஆய்வுக் கட்டுரைகள் பரிசீலிக்கப்படும், அவற்றில் தகுதியான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து ஆய்வு மலர்களில் இடம்பெறும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மாநாட்டு அரங்குகளும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட வேண்டும். அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், துறைச் செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் கே.வி.முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.