புதுடில்லி: காங்., மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, ‘எக்ஸ்’ இணையதளத்தில் நேற்று கூறியதாவது:- நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், மத்திய அரசு, கடந்த ஆண்டு, எம்ப்ளாய்மென்ட் லெட் இன்சென்டிவ் (இஎல்ஐ) திட்டத்தை அறிவித்தது. இதற்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட தொகை எங்கே போனது? நாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களில் மட்டுமே பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார்.
நாட்டின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய அரசு அவர்களை புறக்கணிக்கிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், இஎல்ஐ திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என, பா.ஜ.க., அறிவித்தது. ஆனால் பொறுப்பேற்று ஓராண்டு ஆன நிலையிலும், இத்திட்டம் குறித்து இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. பெரிய நிறுவனங்களில் மட்டும் கவனம் செலுத்தினால், வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது.

உள்நாட்டு உற்பத்தி மற்றும் இந்திய திறன்களைக் கருத்தில் கொண்டு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். நீங்கள் (பிரதமர் மோடி) தினமும் ஒரு கோஷத்தை வெளியிடுகிறீர்கள். ஆனால், இந்திய இளைஞர்கள் சிறந்த வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். ராகுலின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பா.ஜ.க.,வின் ஐ.டி., பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் போஸ்டில், பா.ஜ.க., ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய வேலை வாய்ப்புகள், விவசாயத் துறையை வலுப்படுத்துதல், சேவைத் துறைகளின் மேம்பாடு குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் எப்படி இருந்தது என்ற விவரங்களையும் அவர் தெரிவித்தார். பாஜக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து காங்கிரஸ் உண்மைகளை திரித்து காட்டுகிறது என்றார்.