சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.72 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’. லைகா தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த 12-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளான வெள்ளிக்கிழமை அன்று இப்படம் ரூ.30.75 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து வார இறுதி நாட்களான சனிக்கிழமை ரூ.20 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.18.50 கோடியும் வசூலித்துள்ளது. இதன்படி வெளியான முதல் வார இறுதியில் உலகம் முழுவதும் மொத்தம் ரூ.72.25 கோடி மட்டுமே ‘இந்தியன் 2’ திரைப்படம் வசூல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்படம் ரூ.36 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது கமல்ஹாசனின் முந்தைய படமான ‘விக்ரம்’ படத்தின் கிட்டத்தட்ட பாதி வசூலாக மட்டுமே பார்க்கப்படுகிறது. தெலுங்கு பேசும் மாநிலங்களில் 19.75 கோடி, கர்நாடகாவில் ரூ.7.25 கோடி, கேரளாவில் ரூ.4.25 கோடி, இந்தி பேசும் மாநிலங்களில் ரூ.5 கோடி இப்படம் வசூலித்துள்ளது.
பொதுவாக வெளியான நாட்களை விட வார இறுதி நாட்களில் வசூல் சதவீதம் அதிகரிப்பது வழக்கம். ஆனால் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலியாக சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வசூல் பெரியளவில் குறைந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.