சண்டிகார் நகரில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 31-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் கொல்கத்தாவின் சிறந்த பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு சுருண்டது. இதனால் கொல்கத்தா அணிக்கு வெற்றிக்கான இலக்கு 112 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது. பலர் இது கொல்கத்தாவுக்கு எளிதான வெற்றி என கருதினார்கள்.
ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக, கொல்கத்தா அணி பஞ்சாப் பந்துவீச்சின் முன்னிலையில் நிலைக்க முடியாமல் 15.1 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இது ஐ.பி.எல் வரலாற்றில் மிகக் குறைந்த ரன்கள் கொண்டு எதிரணியை வீழ்த்திய முக்கிய சாதனையாகப் பதிவானது.
தொடக்கத்தில் 62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த கொல்கத்தா அணி, அடுத்த 33 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். அவர் அஜின்க்யா ரஹானே, ரகுவன்சி, ரிங்கு சிங், ரமன்தீப் சிங் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பங்கை வகித்தார். 4 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்கள் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியார்.

போட்டிக்கு முன்னதாகவே தோள்பட்டை காயத்தால் சாஹலின் பங்கேற்பு சந்தேகமாக இருந்தது. இது குறித்து பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் விளக்கினார். கடந்த போட்டியில் சாஹல் காயமடைந்ததால் அவரை விளையாட வைக்கலாமா என்பது குறித்து குழுவில் ஆலோசனை நடந்தது. போட்டிக்கு முன்பாக அவருக்கு பிட்னஸ் டெஸ்ட் வைக்கப்பட்டது. பயிற்சியின் போதும் அவரை பந்துவீச வைக்காமல் இருந்தனர்.
ஆனாலும் பாண்டிங் கூறுகையில், “போட்டிக்கு முன் நான் சாஹலின் கண்களில் நேரடியாக பார்த்து ‘நீ ஓகேவா இருக்கிறாயா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘சார், 100% நன்றாக இருக்கிறேன். விளையாட அனுமதி அளியுங்கள்’ என்றார். அதற்குப் பிறகே அவரை விளையாடவைத்தோம். அவர் நம்பிக்கையை நிறைவேற்றினார். இந்த வெற்றிக்கான காரணம் அவர்தான்” என தெரிவித்தார்.