இந்தியாவில் தொடங்கிய இரு மாதங்களுக்குள் ஜியோ ஹாட்ஸ்டார் தனது முதல் பெரிய சாதனையை அடைந்துள்ளது. சுமார் 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை எட்டிய இந்த புதிய OTT தளம், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது ஜியோ ஹாட்ஸ்டார், உலகளவில் மூன்றாவது பெரிய OTT பிளாட்ஃபார்மாகவும், இந்தியாவின் முன்னணி OTT தளமாகவும் உருவெடுத்துள்ளது.

இது வரை நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற தளங்கள் மட்டுமே முன்னிலை வகித்து வந்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் 200 மில்லியன் சந்தாதாரர்களைத் தாண்டி உலக சந்தையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி 14, 2025 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா இணைந்ததன் பின்னர் ஜியோ ஹாட்ஸ்டார் அறிமுகமானது.
IPL 2025 தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 100 மில்லியன் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. தொடக்கத்திலேயே இது 50 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்று இருந்தது. ஜியோ ஸ்டாரின் சஞ்சோக் குப்தா கூறுகையில், லீனியர் டிவியில் 2 மில்லியன் ஹோம்ஸ்களை சேர்த்துள்ளோம் என்றும், IPL தொடரால் கடந்த மூன்று வாரங்களில் pay TV வகை 2 மில்லியன் ஹோம்ஸ்கள் வரை வளர்ந்ததாகவும் கூறினார்.
பார்வையாளர்கள் IPL போட்டிகளின் ஒவ்வொன்றையும் சுமார் 60 முதல் 100 நிமிடங்கள் வரை தொடர்ந்து பார்ப்பதாகவும், இது பார்வையாளர்களின் ஈடுபாட்டை அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஈடுபாடு மட்டுமல்லாமல், உலகளாவிய விளம்பரதாரர்களின் ஆர்வமும் ஜியோ ஹாட்ஸ்டார் வளர்ச்சிக்கு முக்கிய தூணாக அமைந்துள்ளது.
இப்போது துருக்கிய ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸ், கத்தார் ஏர்வேஸ், எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் ஆகிய ஐந்து விமான நிறுவனங்கள் IPL விளம்பர பங்காளிகளாக உள்ளன. இது, சர்வதேச நிறுவனங்கள் IPL-ஐ தங்கள் பிராண்டுகளை வளர்க்கும் வாய்ப்பாக பார்க்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது.
ஜியோ ஹாட்ஸ்டாரின் துணைத்தலைவர் உதய் சங்கர் கூறுகையில், இந்த வெற்றி உலகளாவிய ஸ்ட்ரீமிங் தளங்களில் ஜியோ ஹாட்ஸ்டாரை முன்னணி நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்குப் பின்னால் இந்திய சப்ஸ்கிரைபர்களின் பங்கு பெரிதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது மிகவும் திருப்திகரமான ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.