சென்னை: திரையரங்கில் கெட்டுபோன பப்ஸ், பாப்கார்ன் விற்கப்பட்டதாகக் கூறி சினிமா பார்க்க வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், `இந்தியன்-2’ திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
சென்னை ஆவடியில் இயங்கி வரும் பிரபல திரையரங்கில் நேற்று முன்தினம் இரவு, சமீபத்தில் வெளிவந்த `இந்தியன்-2’ திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. படத்தின் இடைவேளையின்போது கோவர்த்தனகிரியை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது குழந்தைகளுக்கு கேன்டீனில் இருந்து பப்ஸ், பாப்கார்ன், சீஸ்பால்ஸ் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.
அப்போது அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து திரையரங்கு ஊழியர்களிடம் அவர் விசாரித்தபோது முறையாக பதிலளிக்காததால், அங்கு கூடியிருந்த மற்றவர்களும் சேர்ந்து ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி போலீஸார் உணவுகளை சோதித்துவிட்டு, திரையரங்கு மேலாளரை அழைத்து விசாரித்தனர். கெட்டுப்போன உணவுகள், உணவு பாதுகாப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இச்சம்பவத்தை தொடர்ந்து ‘இந்தியன்-2’ திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டு, ரசிகர்களுக்கு அவர்களின் டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது. இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.