மதுரை அருகே ரயில்வே பாதுகாப்பு குறித்து சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கை, வந்தே பாரத் ரயில்களின் பாதுகாப்பு தொடர்பான புதிய விவாதங்களுக்கு காரணமாகியுள்ளது. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில்கள், திடீரென சாலையை கடந்துவிடும் கால்நடைகளால் அதிக பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை முன்னிட்டு, மதுரை தொகுதி எம்பி சு. வெங்கடேசன் தனது சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்துள்ளார். இந்த அறிக்கையில், வந்தே பாரத் ரயிலின் முதல் பெட்டி பாரம்பரிய ரயில்களில் பயன்படுத்தப்படும் இன்ஜின் பெட்டியை விட மிகவும் இலகுவாக தயாரிக்கப்பட்டதாகவும், அதனால் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஏதாவது தடங்கல் நேர்ந்தாலோ அல்லது மாடு போன்ற கால்நடைகள் எதிராக வந்தாலோ, பெரிய விபத்து நிகழ வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்பு ஆணையர் எச்சரித்துள்ளார்.
அறிக்கையின் பரிந்துரைகளில், ரயில்வே பாதுகாப்புக்காக உயர் வேக பாதைகளில் உறுதியான வேலிகள் அமைக்க வேண்டும், லெவல் கிராசிங் மையங்களை தவிர்க்க வேண்டும், இரவு நேர ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளுடன் விவசாயிகள் பத்திரமாக கடந்து செல்லும் வழியாக சுரங்கப்பாதைகளை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் தெரிவித்துள்ளது.
இந்த பின்னணியில், எம்பி வெங்கடேசன், “வந்தே பாரத் ரயிலின் முன் பெட்டி சாதாரண ரயில்களை விட எடை குறைவானது. இதனால் ஒரு மாடு கூட மோதினால் தடம் புரளும் அபாயம் உள்ளது. பாதுகாப்பு முக்கியம். அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார். மேலும், ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை டேக் செய்து, “வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிப்பதில் காட்டிய ஆர்வத்தை, பயணிகளின் பாதுகாப்பிலும் காட்டுங்கள்” என்றுள்ளார்.
இந்த அறிக்கையும் அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள விவாதங்களும், ரயில்வே துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன. மேலும், இந்த வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்குவதற்கான உடனடி நடவடிக்கைகள் அரசு தரப்பில் எடுக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.