கோவை: தொடர் கனமழையால், பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 97 அடியை தாண்டியதால் அணையில் இருந்து இன்று (ஜூலை 16) காலை 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை உள்ளது. கோவை மாநகரின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த அணையை மையமாக வைத்து பில்லூர் 1 மற்றும் 2 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பவானி ஆற்றை மையமாக கொண்டு 15க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள நீலகிரி மற்றும் கேரள மலை வனப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடியாக உள்ளது. 97 அடியைத் தாண்டியதும் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதன்படி இன்றும் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. அணையின் நீர்மட்டம் 97 அடியை தாண்டியதால் இன்று காலை அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலில் பவானியாற்றில் வினாடிக்கு 22,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. சில மணி நேரத்தில் இது வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
உபரி நீர் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள சிறுமுகை, மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாரும் ஆற்றில் மீன்பிடிக்கவோ, பரிஷம் வழியாக ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மீட்பு பணிகளை மேற்கொள்ள மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.