கொய்யா பழம் சுவையானதோடு மட்டுமல்லாமல், விட்டமின்களும் கனிமச்சத்துக்களும் நிறைந்த ஆரோக்கியப் பழமாகும். இதை வீட்டிலேயே வளர்த்து சாப்பிடலாம். பெரிய இடம் தேவையில்லை, பால்கனி அல்லது மாடி இருந்தாலே போதும். சரியான பராமரிப்பு செய்தால், கொத்து கொத்தாக காய்க்கும்.
முதலில் தொட்டியை சரியாகத் தேர்வு செய்ய வேண்டும். குறைந்தது 18–24 அங்குல ஆழமும் அகலமும் கொண்ட தொட்டி இருந்தால் சிறந்தது. ஏனெனில் கொய்யா வேர்கள் வேகமாகப் பரவும்.

மண் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். தோட்ட மண்ணுடன் கூடிய கோக்கோபீட், பெர்லைட் கலந்து பயன்படுத்தலாம். மண் எப்போதும் லேசான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.
சூரிய வெளிச்சம் அதிகம் பிடிக்கும். தினமும் குறைந்தது 6–7 மணி நேரம் சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் தொட்டியை வைத்தால் சிறப்பாக வளரும்.
ஆரம்ப வளர்ச்சிக் கட்டத்தில் தண்ணீர் அதிகம் தேவைப்படும். மண் வறண்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் தண்ணீர் ஊற்றுவதை குறைக்க வேண்டும். மேலும் வேகமாக வளரும் விதத்தில் 4–6 வாரத்திற்கு ஒருமுறை கரிம உரம் போடுவது அவசியம்.
செடியை பராமரிக்கும்போது, காய்ந்த இலைகளை, பழைய இலைகளை, மண்ணை சுற்றியுள்ள களைச்செடிகளை அகற்ற வேண்டும். கிளைகள் பரவுவதற்கு இடம் கொடுக்க வேண்டும்.
கொய்யா மரம் இயற்கையாகவே மகரந்தச் சேர்க்கையைச் செய்கிறது. எனவே 2–4 ஆண்டுகளில் காய் வைப்பதை காணலாம். காய் சற்று மென்மையடைந்த பின் பறித்தால் சுவையாக இருக்கும்.
சிறிய முயற்சியால் வீட்டிலேயே ஆரோக்கியமான, சுவையான கொய்யா பழங்களைப் பெறலாம்.