தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039-வது மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவையொட்டி இன்று பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது. உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் பெரிய கோவிலில் 1039-வது சதய விழாவையொட்டி பந்தகால் முகூர்த்த விழா நடந்தது.
பந்தக்கால் முன்பு சந்தனம், தயிர், பால், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பந்தக்கால் நடப்பட்டது. விழாவில், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி.மேத்தா, உறுப்பினர் ராமநாதன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ.கவிதா, கோயில் செயல் அலுவலர் மாதவன், வெற்றி தமிழ் வாரிய ரா. செழுமையும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.