திருமலையில் கார்த்திகை வனபோஜன உற்சவம் வரும் 17-ம் தேதி நடைபெறும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வனபோஜன உற்சவம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு விழா வரும் 17-ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி அன்று காலை மலையப்பர் பார்வேட்டை சிறிய ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்படும். ஸ்ரீதேவி, பூதேவியும் இதே போல் பல்லக்கில் ஊர்வலமாக வருவார்கள். அந்த அடர்ந்த வனப்பகுதியில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெறும். பின்னர் பக்தர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகளுக்கு வன உணவு வழங்கப்படும்.
இந்த திருவிழாவை முன்னிட்டு திருமலையில் 17-ம் தேதி மாலை நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கார்த்திகை தீப உற்சவம் நவம்பர் 18-ம் தேதி கொண்டாடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அன்று திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலக வளாகத்தில் கார்த்திகை தீப உற்சவம் நடக்கிறது. இதில், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பெண் ஊழியர்கள் பங்கேற்று நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றி சிறப்பு பூஜையில் ஈடுபடுவர். அன்றைய தினம் திருமலை கொடிகம்பம் அருகே உள்ள அறுபடை மேடையில் பெரிய கல் தீபத்தில் தீபம் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.