சென்னை: பைரவ விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு வாய்ந்ததாகும்.
காசியில் காலபைரவர் எட்டு இடங்களில் கோயில் கொண்டுள்ளார். இதனை பைரவ சேத்திரம் என்றும் கூறுகின்றனர்.
காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது.
காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.
தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
பைரவ விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்புவாய்ந்ததாகும். பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.