புட்டபர்த்தி: குரு பௌர்ணமியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான சத்யசாய்பாபா பக்தர்கள் குவிந்தனர்.
திட்டங்கள்
ஒவ்வொரு ஆண்டும் குரு பௌர்ணமியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, இந்த ஆண்டும், இன்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 8:00 மணிக்கு வேதம், 8:20 மணிக்கு பிரசாந்தி பஜனை குழுவினரின் குரு வந்தனத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கின.
காலை 9:00 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை அறங்காவலர் எஸ்.எஸ்.நாகானந்த் வரவேற்புரை ஆற்றி, சத்ய சாயியின் போதனைகள் மற்றும் பகவத் கீதையின் முக்கிய அம்சங்களை மேற்கோள் காட்டி பேசினார். அவர் கூறியதாவது: குருபூர்ணிமா என்பது நமது குருவுக்கு நன்றி தெரிவிக்கும் வாய்ப்பு. குரு படைப்பாளியாகும்போது, குருகுலம் அற்புதமான வடிவம் பெறுகிறது. நுழைவுத் தேர்வு இல்லாததால், அனைவரின் ஆர்வமும் தூண்டப்படும். இதற்கான ஒரே தகுதி அன்பு மட்டுமே. சத்ய சாய்பாபாவின் போதனைகளையும் அவர் காட்டிய வழிகளையும் பக்தர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 9:10 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஸ் பாண்டியா சிறப்புரையாற்றினார்.
சேவை திட்டம்
9:20 மணிக்கு, இமாச்சல பிரதேச கவர்னர் ஷிவ் பிரதாப் சுக்லா மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை திட்டத்தை துவக்கி வைத்தார்.
முக்கிய உரை
9:25 சிறப்பு விருந்தினர் கவர்னர் ஷிவ் பிரதாப் சுக்லா சிறப்புரையாற்றினார்: குருவின் பாதங்களை முழு நம்பிக்கையுடன் வணங்கும்போது, அவரது முழு ஆசிர்வாதம் கிடைக்கும். சத்ய சாய்பாபாவின் போதனைகள் எல்லையற்றவை. உள்ளிருந்து பக்தி தோன்றி, கடவுளின் அருளால் மனதைத் தொடும்போது, மனிதன் தன் உடல் உணர்வை இழக்கிறார். சத்ய சாய்பாபாவின் கொள்கைகள் 140 நாடுகளில் பரவியுள்ளன. அனைவரையும் நேசிப்பதன் மூலமும் அனைவருக்கும் சேவை செய்வதன் மூலமும் உலகை ஒன்றிணைக்க அனைவருக்கும் சேவை செய்வதன் மூலமும் அனைத்தையும் இலவசமாக்குவதன் மூலமும் வளர நாங்கள் இங்கு வந்துள்ளோம். வாழ்க்கையில் நமக்குத் தேவையானதை மட்டுமே இறைவனிடமிருந்து பெற வேண்டும். அனைத்தையும் அறிந்த கடவுள் தகுதியானதையும், தேவையானதையும் தருகிறார் என்றார் சத்யசாய்பாபாவின் வாழ்க்கையை நினைவுகூர்ந்த அவர், உலக நலனுக்காக பாடுபடும் அவரது பெயரில் உள்ள அமைப்பைப் பாராட்டினார். 9:20க்கு தெய்வீக சொற்பொழிவு; 10:00 மணிக்கு பஜனை, தீபாராதனை நடந்தது.
ரஞ்சனி காயத்ரி குழுவினரின் இசை நிகழ்ச்சி
மாலை 4:30 மணிக்கு வேதவாக்கு; மாலை 5:00 மணிக்கு ரஞ்சனி காயத்ரி குழுவினரின் ஆன்மிக நிகழ்ச்சி நடக்கிறது. 5:45க்கு பஜனை, தீபாராதனை காட்டப்படுகிறது. நிகழ்ச்சியை ஒட்டி, சாய் பிரசாந்தி நிலையத்தில் விழா ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குல்வந்த் மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே குடும்பத்துடன் வந்துள்ள பக்தர்கள் சாய் பிரசாந்தி நிலையத்தில் தங்கியுள்ளனர்.