தஞ்சாவூர்: சோழ வளநாடு சோறுடைத்து என்பார்கள். அதாவது நாட்டிற்கே உணவளிக்கும் பெரிய ஊர் தஞ்சாவூர்தான். காரணம் விவசாயம். இன்று அந்த பெயர் மறைந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கிய தஞ்சையின் வயல்கள் இன்று கான்கிரீட்டை (கட்டிடங்கள்) விளைவித்துள்ளன. ஆனால் என்று மாறாத பெருமை இந்நகருக்கு உண்டு. அதுதான் கோயில் நகரம். தஞ்சையை விட கும்பகோணம் கோயில்கள் நிறைந்த ஊர். திரும்பிய பக்கம் எல்லாம் கோயில்கள்தான்.
அப்படி கோயில்கள் நகராக விளங்கும் கும்பகோணத்திலிருந்து வடமேற்கே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்புறம்பயம். இங்கு எழுந்தருளியுள்ளார் சாட்சிநாத சுவாமி. இவருக்கும் தனிப்பெருமை உண்டு. இக்கோயிலில் வீற்றிருக்கும் பிரளயம் காத்த விநாயகருக்கும் அதிக பெருமை உண்டு. இவ்வாறு பக்தர்களுக்கு நலம் பொழியும் தந்தை, மகன் கோயில் என்றே சொல்லலாம்.
முதலாம் ஆதித்தசோழனின் சாம்ராஜ்யத்தின் வெற்றிக்கு அடித்தளமாகவும், சோழ வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. வீரத்தின் விளைநிலம் திருப்புறம்பயம். ஆகவே இத்திருத்தலம் திருப்புறம்பயம் ஆனது. நால்வரால் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தல வரிசையில் 46-வது திருத்தலமாகும் இக்கோயில். பரஞ்ஜோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தில் 64-வது படலமான சாட்சிநாத படலத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது இக்கோயில். இக்கோயிலின் தலவிருட்சம் (மரம்) புன்னை மரம். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை கொண்டது என்று கூறப்படுகிறது. புராணப் பழமையும், வரலாற்றுப் பெருமையும் மிக்க இக்கோயில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையிலும் சிறப்புமிக்கது ஆகும். இக்கோயிலில் மாசி மாதத்தில் நடைபெறும் பிரமோற்சவமும், ஆவணி மாதத்தில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவும், குருபெயர்ச்சி விழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோயில் சிவன் கோயில் ஆகும். இங்குள்ள மூலவர் சாட்சிநாதேஸ்வரர், புன்னைவனநாதர், சாட்சீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இதற்கு காரணம் இருக்குங்க. சாட்சி என்றால் என்ற தம் முன்னால் நடக்கும் ஏதோ ஒரு காரியத்தை அப்படி சொல்வதே சாட்சி. அதேபோல்தான் இத்தல சுவாமியும் சாட்சி சொன்னதால் சாட்சிநாதேஸ்வரர் ஆனார். அது எப்படி தெரியுங்களா?
இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தடியில் வந்து தங்கினான் அரதனகுப்தன் எனும் தனவணிகன். இவனுடன் வந்த பெண் ரத்னாவளி. அப்போது தனவணிகளை பாம்பு தீண்டியது. இதை கண்ட ரத்னாவளி புன்னைவன நாதரிடம் உருக்கமாக புலம்பினாள். அந்த பெண்ணின் கண்ணீரால் கருணை கொண்ட ஈசன் தனவணிகனை உயிர்ப்பித்தார். பின்னர் இருவருக்கும் தானே முன்னின்று திருமணம் செய்து வைத்தார். எத்தகைய பெருமை இது.
பின்னர் அந்த தனவணிகனின் மூத்த மனைவி இதுகுறித்து மதுரையில் வழக்கு தொடுத்தார். இதனால் புறப்பியத்து ஈசனான புன்னைவனநாதர் இல்லத்து மடைபள்ளி, வன்னிமரம், கிணறுசகிதமாய் மதுரையில் காட்சியளித்து சாட்சி உரைத்தார். அதாவது திருமணம் நடந்ததற்கு சாட்சியாக நின்றார். இதுகுறித்த சான்று மதுரை அருள்மிகு மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஈசான்ய பாகத்தில் கற்றிளி உருவில் காணலாம். இதனால்தான் இத்தல ஈசன் சாட்சிநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற, செவ்வாய்கிழமை தோறும் 11 வார அர்ச்சனையும், 63 நல்லெண்ணெய் தீபமும், பரிகார ஹோமமும், அபிஷகமும் செய்தால் நல்லது நடைபெறும் என்பது ஐதீகம். இப்படி தங்கள் குறைகளை நிவர்த்தி செய்த சாட்சிநாத சுவாமியை பக்தர்கள் மீண்டும் மீண்டும் தரிசனம் செய்வது இக்கோயில் வரலாறு. அதுமட்டுமா? சாட்சிநாத சுவாமியை வழிபடும் பக்தர்களுக்கு பூர்வ ஜென்ம பாவ விமோசனமும், இப்பிறப்பில் நல்ல சிந்தனைகளும் கிடைக்க பெறும் என்று நம்பப்படுகிறது. இது தல ஈசனின் பெருமை என்றால் இக்கோயிலில் வீற்றிருக்கும் பிரளயம் காத்த விநாயகரின் பெருமை உலகறிந்தது. அதை பற்றி பார்ப்போம்!
தந்தையே இவ்வளவு பெருமை மிக்கவர் என்றால் தனயன் அதையும் தாண்டி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ராகு அந்தர கற்பத்தில் ஏற்பட்ட பிரளயத்தின் போது (வெள்ளக் காலம்) அந்த பிரளயத்தில் இருந்து திருப்புறம்பயத்தை தன் கருணையால் காத்தார் இத்தல விநாயகர். அதனால்தான் இவருக்கு பிரளயம் காத்த விநாயகர் என்று பெயர் வந்தது.
வெள்ளம் போன்ற துன்பங்களில் இருந்து பக்தர்களை காப்பாற்றுபவர் என்பதற்கேற்ப விநாயகர் பெயர் பெற்று விளங்குகிறார். மற்ற அனைத்து இடங்களில் இல்லாத சிறப்பு அம்சம் இக்கோயில் விநாயகருக்கு உண்டு. பிற இடங்களில் சிற்பமாக அதாவது உலோகம், கற்களால் ஆன சிலையே விநாயகருக்கு இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது. ஆனால் இங்குள்ள விநாயகர் எப்படி இருக்கிறார் தெரியுங்களா?
நத்தான் கூடு, கிளிஞ்சல், கடல்நுரை இவற்றாலான தெய்வத் திருமேனி கொண்டவர் இத்தல விநாயகரான பிரளயம் காத்த விநாயகர். வருண பகவானால் பிரதீஷ்டை செய்யப்பெற்ற விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தித் திருநாளில் இரவு முழுவதும் தேனால் அபிஷகம் செய்யப்படுவதுதான் மிகப்பெரிய விசேஷம். எப்படி தெரியுங்களா? லிட்டர் லிட்டராக தேன் அபிஷேகம் நடக்கும். சுவாமிகளுக்கு செய்யப்படும் அபிஷேக பொருள் திருமேனியில் பட்டு வெளியேறும். ஆனால் இத்தல விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேக தேன் முழுவதும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதுதான் ஆச்சரியம், அதிசயம்…நம் கண்முன்னே நடக்கும் கண் நிறைந்த காட்சியாகும்.
விநாயகர் சதுர்த்தி அன்று பிரளயம் காத்த விநாயகரை தரிசனம் செய்தால் சர்வ சங்கடங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். மற்ற நேரங்களில் இவ்விநாயகருக்கு எவ்வித அபிஷேகமும் நடப்பதில்லை. திருமேனி உறிஞ்சி தேன் என்னவாகிறது என்பது யாருக்கும் தெரியாத பெரும் அதிசயம். பிரளயகாலத்தில் அத்தனை தண்ணீரையும் உள்ளிழுத்ததால் பெயர் பெற்ற இந்த விநாயகர் தேனையும் அப்படியே தன் திருமேனியில் எடுத்துக் கொள்கிறார். அதிசயங்களும், பக்தர்களுக்கு அருளையும் அள்ளித்தரும் இத்தலத்தை கண்டு தரிசிப்போம்.