பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடும்பு திருவாலத்தூரில் உள்ள இரண்டு பகவதி அம்மன் கோவில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டது. கொடும்புவில் சோகநாஷினி ஆற்றங்கரையில் மகிஷாசுரமர்தனி மற்றும் அன்னபூர்ணேஸ்வரி என்ற இரண்டு பகவதி அம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் பண்டைய காலத்தில் பூதகணரால் வடிவமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இக்கோயில்களில் கடந்த டிசம்பர் 7-ம் தேதி கோயில் தந்திரி அண்டலாடி பரமேஸ்வரன் நம்பூதிரிபட் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. தினமும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழா துவங்கியது முதல் சாக்கியார்கூத்து, பாடகம், கதகளி, ஒட்டன்தூள், நாதஸ்வர கச்சேரி, தாயம்பகா, பஞ்சவாத்யம், கேளி, பற்று, மேளம், திருவாதிரை நாட்டிய நிகழ்ச்சிகள், சோபான சங்கீதம், பக்தி இன்னிசை கச்சேரி, பக்தி பிரபாசனம், ராமாயண பாராயணம் ஆகியன நடந்தன.
கடந்த டிசம்பர் 7-ம் தேதி முதல் பாலக்காடு மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளான தத்தமங்கலம், சித்தூர், பாலக்காடு, கஞ்சிக்கோடு, வாளையார், கொழிஞ்சம்பாறை, வண்டிதாவளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் இக்கோயிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். கோயிலின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பக்தர்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
நேற்று முன் தினம், நேற்று, நாளை என, பக்தர்கள் நெய்யில் கார்த்திகை தீபம் ஏற்றி, கோவில் சுற்றுச்சுவர்களில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். வீட்டில் செல்வம் பெருகும், தொழில் வளர்ச்சி, கல்வி தடைகள், திருமண தடைகள் நீங்கும், செல்வ செழிப்பு பெருகும் என பக்தர்கள் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை மலபார் தேவஸ்தான அறங்காவலர், கோவில் நிர்வாக குழு தலைவர் தம்பி, செயலாளர் நாராயணன்குட்டி ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
திருவிழா தொடங்கியதில் இருந்து காலை, மதியம், இரவு என பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். இன்று ஆறாட்டு உற்சவம் நடைபெறுகிறது. அம்மன், செண்டை வாத்தியத்துடன், இரண்டு யானைகள் மீது சொக்கநாசினி ஆற்றில் நீராடி, வீதியுலா வந்து, உச்சிக்காலங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு ஆராட்டு சத்யா (உணவு) வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து திருவிழா கொடி இறக்கப்படுகிறது.