சென்னை: உலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்லவரான ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது தான் வில்வ மரம். இதுவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும். இவ்விருட்சத்தைப் பூஜிப்பவர்கள் சகல நன்மைகளும் பெறுவார்கள். வில்வத்தின் பெருமையை பற்றி சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் மிக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
வில்வ இலைகள் சிவனின் திரிசூல வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பதாக விளங்குகின்றன. ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும், திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்.
அதன்படி வேதங்களும் வில்வமரங்கள் அடியில் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது. வில்வத்தில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம்.
இவையல்லாமல் ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்த வேண்டும்.
தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனை பூஜித்தால், நம்முடைய ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.
சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் வில்வ இலையை பறிக்கக் கூடாது. மேலும் இந்நாட்களில் பூஜைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைத்து கொள்ள வேண்டும். வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் வைத்திருந்து பூஜை செய்யலாம்.