தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குறிச்சி விசாலாட்சி உடனுறை அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் பாலாலயம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள, குறிச்சி அருள்மிகு விசாலாட்சி உடனுறை அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் பாலாலயம் நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இக்கோயிலை புனரமைத்து திருக்குடமுழுக்கு செய்து தருமாறு கிராம மக்கள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் துறை அலுவலர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், கோயில் திருப்பணிக்கு தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது. உபயதாரர்கள் உதவியுடன் திருப்பணி தொடங்க உள்ள நிலையில், முதல்கட்டமாக பாலாலயம் நடைபெற்றது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, திருப்பணியை தொடங்கி வைத்தார். இதில், கோயில் செயல் அலுவலர் எல்.ஆர்.அருண்பிரகாஷ், ஆய்வாளர் கே.சந்திரசேகர் மற்றும் கிராம பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.