பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமையான கிராம தெய்வமான அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது.
முன்னதாக அனுக்ஞை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், முதல் கால ஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், யாகங்கள், தொடர்ந்து நாகாத்தம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, இரண்டாம் கால யாக பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து வந்த கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இன்று அதிகாலை கலசம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு மேள தாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் தலையில் கலசங்களை ஏந்தி கோவிலை வலம் வந்தனர்.
பின்னர் சிவாச்சாரியார்கள் கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மூலவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், ஜவ்வரிசி, தேன், பன்னீர், குங்குமம், மஞ்சள் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோயில் சார்பில் மஞ்சள் மற்றும் மஞ்சள் கலந்த அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.சத்தியவேலு, மாவட்ட பிரதிநிதி கே.வி.வெங்கடாசலம், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி உதயகுமார், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி குமார், சிவா, ஜி.வெங்கடேசன், வி.வெங்கடேசன், செல்வம் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இன்று மாலை உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மலர்களால் ஊஞ்சல் சேவையும், இரவு முக்கிய வீதிகள் வழியாக உற்சவர் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.