தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழவாசலில் அமைந்துள்ள படைவெட்டி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
தஞ்சாவூர் கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள படைவெட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த விழா கமிட்டி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து படைவெட்டி அம்மன் மற்றும் மகா கணபதி, முருகன், துர்க்கை, முனியாண்டவர், பேச்சியம்மன், காத்தவராயர், சப்த கன்னிகள் கோயில் புனரமைக்கப்பட்டது.
மேலும் கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், கோபுர விமானங்கள் புனரமைக்கப்பட்டன. தொடர்ந்து சுற்றுப்பிரகாரம் சீர் செய்யப்பட்டு கோயிலுக்கு புதிய வர்ணம் தீட்டப்பட்டது. இதையடுத்து கடந்த 13ம் தேதி காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. அன்று மாலை முதல்கால யாக சாலை பூஜை நடந்தது.
இதையடுத்து மறுநாள் 2ம் கால யாகசாலை பூஜை, வேதிகா அர்ச்சனை ஆகியவை நடந்தது. பின்னர் இன்று காலை 4 கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து யாத்ரா தானம் மற்றும் கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து விமான மகா கும்பாபிஷேகம் நடந்தது. மேலும் மூலஸ்தானம், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் சொக்கா ரவி மற்றும் விழா குழுவினர், தெரு மக்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.