திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜை சீசன் முடிவடைந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 26-ந்தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் (டிசம்பர்) 30-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சென்றார்கள். மகரவிளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. லட்சக் கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தார்கள்.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான மகர விளக்கு பூஜை பந்தளம் அரண்மனை ராஜ பிரதிநிதி சாமி தரிசனத்துக்கு பிறகு நிறைவுக்கு வந்தது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு கோவில் தந்திரிகள் கண்ட ரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் கணபதிஹோமம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அபிஷேகம் மற்றும் நைவேத்திய பூஜைகள் நடந்தன.
மகர விளக்கு வைபவத்தை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த திருவாபரணங்கள் பந்தள அரண்மனையிடமிருந்து கொண்டு வந்த திருவாபரண குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அவர்கள் எடுத்துக் கொண்டு பதினெட்டாம்படி வழியாக இறங்கிச் சென்று பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்டனர்.
அதே நேரத்தில் பந்தளம் அரண்மனை ராஜ பிரதிநிதி திருக்கேத்தநாள் ராஜராஜ வர்மா ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு மேல் சாந்தி அருண்குமார் நம்பூ திரி, ஐயப்பன் சிலைக்கு விபூதி அபிஷேகம் செய்தார்.
பின்னர் ஐயப்பனின் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிவித்தல், கையில் யோக தடி வைத்து யோக நிலையில் அமர்த்தும் நிகழ்வு நடைபெற்றது.
பின்பு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. கோவில் சாவியை பந்தள அரச பிரதி நிதியிடம் மேல்சாந்தி ஒப்படைத்தார். அதனை கையில் வைத்துக்கொண்டு அரச பிரதிநிதி பதினெட்டாம் படி வழியாக இறங்கிச் சென்றார்.
பதினெட்டாம் படி இயங்கியதும் கோவில் சாவியை தேவசம் பிரதிநிதிகள் மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜூ நாத்திடம் ஒப்படைத்தார். அப்போது மாதாந்திர பூஜை செலவுக்கான பணமும் வழங்கப்பட்டது.
பின்னர் அரச பிரதிநிதி மற்றும் அவரது குழுவினர் பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்டனர். திருவாபரண ஊர்வலம் வரும் 23-ந்தேதி பந்தளம் அரண்மனையை சென்றடைகிறது.