சென்னை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு 100 கிலோ வெள்ளி கட்டிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு காணிக்கையாக வழங்கி வெள்ளி தகடுகள் தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வெள்ளி தேர் ராஜீவ் காந்தி மறைவின் போது கலவரக்காரர்களால் எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளித் தேர் புதுப்பிக்கும் பணி அறநிலையத் துறையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், வெள்ளித் தேர் அமைக்கும் பணியைத் தொடங்க முதல்வர் உத்தரவிட்டார்.
அந்த வகையில், முதற்கட்ட கள ஆய்வும், வெள்ளித் தேரை மரத்தாலான தேராக மாற்றும் பணியும் நிறைவடைந்துள்ளது. இந்த வெள்ளிப் பொருட்களுக்கு சுமார் 450 கிலோ வெள்ளி தேவைப்படுகிறது.
கோவில் சார்பில், நன்கொடையாளர்கள் மூலம், 9 கிலோ வழங்கப்பட்டுள்ளது. தற்போது 100 கிலோ வெள்ளிக் கட்டிகள் வெள்ளித் தேரை செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளன.
இதன் மதிப்பு 1 கோடியே 2 லட்சம். மீதமுள்ள 300 கிலோ வெள்ளிக் கட்டிகளை நன்கொடையாகப் பெற உள்ளோம். 86 கோடி செலவில் 121 அன்னதானக் கூடங்கள் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 2025 கோவில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 2500 கோவில்கள் புதுப்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.