திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோத்ஸவத்தின் 6-வது நாளான நேற்று பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் கடந்த மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடந்து வருகிறது.
9 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வாகன சேவைகள் மற்றும் அன்னையை வழிபட்டனர். இந்நிலையில், 6-வது நாளான நேற்று காலை, அன்னை, காளிங்க நர்த்தனம் செய்த ஸ்ரீகிருஷ்ணர் வடிவில், பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வாகன சேவையில் ஜீயர்கள், கோவில் நிர்வாகிகள், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நாட்டியக் குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று மாலை பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் வலம் வந்தார். ஏராளமான பெண்கள் தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, இரவு பத்மாவதி தாயார் கருட வாகனத்தில் வலம் வந்து நகரின் 4 வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.