திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த டிசம்பர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலஸ்தானத்தில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரத்தில் உள்ள மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபத்திருவிழாவிற்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மகா தீபம் காண பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க, அவர்களின் கைகளில் பெயர், பெற்றோர் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டேக்குகள் கட்டப்பட்டுள்ளன.