கோயம்புத்தூர்: நடை சாத்தப்படாமல் தொடர்ந்து வழிபாடு நடக்கும் கோயில்… காலை ஐந்து மணி முதல், இரவு பத்து மணி வரையே நடை சாத்தப்படாமல் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் சிறப்பு பெற்றது கோவை ஈச்சனாரி விநாயகர் கோயில்தான்.
சில நூறு ஆண்டுகளுக்கு முன் கோவை மாநகருக்கு மேற்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ள மேலைச் சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீசுவரர் திருக்கோயிலில் வைப்பதற்காக ஆறடி உயரமும் மூன்றடி அகலமும் கொண்ட விநாயகர் சிலையை செய்து மதுரையிலிருந்து மாட்டு வண்டி மூலம் கோவைக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் ஈச்சனாரி என்ற இடத்தை அடைந்தபோது வண்டியின் அச்சு முறிந்து, சிலை தரையில் இறக்கப்பட்டது.
அச்சை சரி செய்து மீண்டும் சிலையை வண்டியில் ஏற்றிட மேற்கண்ட முயற்சிகள் அத்தனையும் தோல்வியுற்றன. எனவே அந்த இடத்திலேயே, விநாயகப் பெருமானுக்கு கோயில் உருவானது. 1977ல் முதல் குடமுழுக்கு விழாவும் நடைபெற்றது. ஆண்டு முழுவதும் 365 நாட்களிலும் உபயதாரர்கள் மூலம் கணபதி ஹோமம் நடைபெறுகிறது. மாலையில் நாள்தோறும், பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதலாக தங்கரதம் இழுத்து மகிழ்வார்கள், மதியம் அன்னதானம் நடைபெறுகிறது.
மூன்று நிலை ராஜகோபுரத்துடன் பெரியதொரு பிராகாரமும் அதன் நடுவிலே அமைந்துள்ள கருவறையில் உயர்ந்த பீடத்தில் வீற்றிருக்கிறார் விநாயகர். ஆறடி உயரம், மூன்றடி அகலம், அமர்ந்த கோலம்.
பெருவயிற்றைச் சுற்றிய நாகாபரணமும் கழுத்தில் உருத்திராட்ச மாலையும் ஐந்தடி உயரம் கொண்ட வலதுகாலை பீடத்தில் வைத்தபடியும் இடதுகால் நம்மை நோக்கியபடியும் அமைந்துள்ளன. வலதுகரத்தில் உடைந்த தந்தமும் இடதுகரத்தில் மோதகமும் மேற்கரங்களில் பாசமும் அங்குசமும் ஏந்தியபடி காட்சி தருகிறார் விநாயகர். காலையிலும், மாலையிலும் திருமஞ்சனம் செய்விக்கப்படும்போது பேரழகனின் எழில் திருமேனியை கண்குளிரத் தரிசிக்கலாம்.
கோயமுத்தூருக்கு தெற்கே பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில் 9 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது ஈச்சனாரி. நெடுஞ்சாலையை ஒட்டியே கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது.