சென்னை: பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே.
ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும். ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும்.
அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் ‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்றும், ‘சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்’ என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.
பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம்.
நவ திருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம்.