சென்னை: ‘ராமா’ என்னும் ஒரு மந்திரம் நமது வாழ்வை வளம் பெற செய்து,செல்வ செழிப்பை உண்டாகும். இம்மையிலும் மறுமையிலும் நமக்கு துணையாக இருக்கும் ராம நாமம்.
மனதில் அச்சத்தை போக்கி, தைரியத்தைக் கொடுக்கும். ‘ராமா’ என்ற இரண்டெழுத்து மந்திரம், நம் மனதில் மண்டியிருக்கும் ஆணவம், காமம், குரோதம் பேராசை என்ற தீமையை அழித்து, அன்பை விதைக்கும். அறிவைப் பெருக்கும்.
ஒரு பெயருக்கே இத்தனை சக்தி என்றால் அந்த அற்புதமான பெயரை தாங்கி நிற்பவன் என்ன சாதாரணமானவனா? கடவுளாக இருந்தாலும்,பூமியில் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரண புருஷனாக இருந்தவன். சொல் ஒன்று செயல் ஒன்று என்று இல்லாமல், சொல்லே செயலாக வாழ்ந்து காட்டியவன்.
மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில், ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒரு மேன்மை உண்டு. நோக்கம் உண்டு. ஆனால், ஒரு அவதாரத்திலேயே பல உத்தம நெறிகளை நமக்கு எடுத்து சொன்னது ராம அவதாரம்.
தாய் தந்தைக்கு ஏற்ற மகனாக, தம்பிகளுக்கு சிறந்த அண்ணனாக, குருவின் எண்ணம் அறிந்து செயலாற்றும் சீடனாக,வாழும் காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏகப்பத்தினி விரதனாக, பேதமில்லாத நல்ல தோழனாக, தனது மக்களின் குறையை தீர்த்து ராமராஜ்ஜியம் தந்த ஒப்பற்ற தலைவனாக , ராமர் மக்களுக்கு வகுத்துக் கொடுத்த நெறிமுறைகள் அநேகம்.
புராணங்களில்,சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அன்றைய தினத்தில், ராமபிரானை விரதமிருந்து வழிபட வேண்டும். ராமரை மட்டும் தனியே வழிபட முடியுமா? அவரை பிரியாமல் அவருடன் காட்சி தரும் சீதா, லட்சுமணர், அனுமனையும் சேர்ந்தே நாம் வழிபடுவதால், அவர்களின் அனைவரின் ஆசியும் நமக்கு கிடைக்கும்.