புதுக்கோட்டை: புதுக்கோட்டைக்கு பக்கத்துல உள்ள குடுமியான்மலையில் ராவணனுக்கு சிலை இருக்கு என்பது தெரியுங்களா. இருக்கே. பத்து தலை, இருபது கரங்களுடன் அற்புதமான வேலைபாட்டில் இந்த சிலையை செய்து இருக்காங்க.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலையில் வரலாறு மற்றும் கலை ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள உதவும் குடைவரை கோவில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுகள் பொக்கிஷமாக அமைந்துள்ளன.
புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ, திருச்சியிலிருந்து 62 கி.மீ. தூரத்தில்தான் இந்த குடுமியான்மலை அமைந்துள்ளது. பழங்கால வரலாறு மற்றும் கலை இவற்றை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இங்குள்ள குடைவரை கோயில்கள் உதவுகிறது. இங்கு ஒரு குன்றின் மீது சிக்கநாதீஸ்வரரை மூலவராக கொண்ட சிவபெருமான் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலை சுற்றி உள்ள நான்கு சிறு கோவில்கள், அவற்றில் உள்ள சிற்பங்கள் நமது முன்னோர்களின் கலைத்திறனை அருமையாக, தெளிவாக விளக்குகிறது. இதில் உள்ள சிற்பங்கள் அனைவரின் கண்களுக்கும் கலை விருந்தாக அமைகிறது. தலைவாழை இலைப் போட்டி அறுசுவை உணவு வைத்து சாப்பிட்டால் ஆஹா என்ன பிரமாதம் என்று சொல்வோம் அல்லவா. அதுபோல்தான் குடுமியான்மலை சிற்பங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
இங்கு அமைந்துள்ள குகை கோவிலின் முகப்பில் கா்நாடக சங்கீதத்திற்கு இலக்கணம் சொல்லும் இசை கல்வெட்டு ஒன்றும், 100-க்கு மேற்பட்ட கல்வெட்டுகளும் உள்ளது. பல்லவர் காலத்து கலைநயங்கள் நிரம்பிக்கிடக்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில், குடுமியான்மலையும் ஒன்று என்பதும் முக்கியம் வாய்ந்தது.
முற்காலக் குறிப்புகளில் திருநாலக்குன்றம் என்றும், அதற்கு பின்னர் சிகாநல்லூர் என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சியின்கீழ் இந்த ஊர் இருந்துள்ளது. இந்த ஊரில் இருந்துகொண்டு இவர் யாகம் செய்ததால் இவரைக் ‘குடுமிக் கோமான்’ என்று அழைத்துள்ளனர்.
குன்றின் மேலும், அதன் அருகிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடைவரைக் கோயிலும், கலை நயம் மிக்க சிலைகளை உடைய சிகாநாதசுவாமி கோயில் என்ற பெரிய சிவன்கோயிலும் அடங்கும். குடைவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள், இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கிருக்கும் ராவணனின் 10 தலை சிற்பம்போல வேறெங்கும் காணப்படுவதில்லை. வியக்கவைக்கும் அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதிகாசங்களில் கூறப்படும் ராவணனை கற்பனை கண் கொண்டு பார்த்தால் இப்படித்தான் இருந்து இருப்பார் என்று நினைக்கத் தோன்றும் வகையில் அற்புதமாக கலைப்படைப்பாக, சிற்பமாக வடிவமைத்துள்ளனர்.
மலைக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதி, அதன் அருகில், குன்றின் மேல் பகுதி என மொத்தம் நான்கு கோயில்கள் உள்ளன. குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சிக்கநாதீஸ்வரசாமி கோயிலின் ராஜ கோபுரத்தை அடுத்து உள்ளே நுழைந்தால், ஆயிரங்கால் மண்டபத்தைக் காணலாம்.
இந்த மண்டபத்தின் முகப்புத் தூண்களில்தான் அனுமன், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன. இதையடுத்து, வசந்த மண்டபத்திற்குள் நுழைந்ததும் சிற்பக் கூடம் ஒன்றிற்குள் நுழைந்த உணர்வு ஏற்படுகிறது. இம்மண்டபத்தின் தூண்களில் பத்துத் தலையுடன் கூடிய ராவணன் உயிரோட்டமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள கல்வெட்டுகள், குடுமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதிசெய்ய உதவுகின்றன. குடுமியான் மலைக் கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டுச்செல்கின்றன என்றால் மிகையில்லை.
சோழப் பேரரசின் தொடக்க காலம் முதல்தான், இக்கோயிலின் வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன.