திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை 11 நாட்களுக்கு பிறகு மண்டபத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானை (26) கடந்த 18-ம் தேதி திடீரென ஆக்ரோஷமாகி, உதவி பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோரை தாக்கியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் யானை உள்ளது. யானை பாகன்கள் ராதாகிருஷ்ணன், செந்தில் ஆகியோர் யானையை குளிப்பாட்டி உணவு அளித்து வருகின்றனர். யானை அருகே பக்தர்கள் யாரும் செல்ல முடியாதபடி போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் யானை இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் நேற்று காலை ஆனந்த விலாச மண்டபத்தில் யானைக்கு வேத விற்பன்னர்கள் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்தினர். பின்னர், யாகத்தில் வைக்கப்பட்டிருந்த கும்பம் கொண்டு வரப்பட்டு, யானை தங்கியிருந்த மண்டபம் மற்றும் யானை மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து, 11 நாட்களுக்கு பிறகு நேற்று யானை தெய்வானை மண்டபத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. வழக்கமாக வெளியே வந்த தெய்வானை யானையை பக்தர்கள் ஆர்வமுடன் தரிசனம் செய்தனர்.