திருமலை: திருமலையில் ரூ.13.45 கோடி செலவில் மாத்ரு ஸ்ரீ வகுலமாதா அதிநவீன சமையல் அறையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று (சனிக்கிழமை) காலை திறந்து வைத்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆந்திர அரசு சார்பில் நேற்று இரவு சுவாமிக்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் வழங்கினார்.
மேலும், சுவாமி தரிசனம் செய்து, 2025-ம் ஆண்டுக்கான தேவஸ்தான காலண்டர், டைரிகளை வெளியிட்டார்.இதை தொடர்ந்து, நேற்று இரவு நடந்த பெரிய சேஷ வாகன சேவையிலும் பங்கேற்றார். தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், இன்று காலை மலையாள ஸ்ரீகிருஷ்ணர் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார்.
மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதால் திருமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது. மாட வீதிகளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் வாகன சேவையை கண்டு மகிழ்ந்தனர். 16 மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.
இன்று இரவு உற்சவர் அன்ன வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ரூ.13.45 கோடியில் அதிநவீன சமையலறை கட்டப்பட்டது: திருப்பதி தேவஸ்தானம் ரூ.13.45 கோடியில் அதிநவீன சமையல் அறையை கட்டியுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். இதில் ஆந்திர மாநில இந்து சமய நலத்துறை அமைச்சர் ராம்நாராயண ரெட்டி, தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து காரில் ரேணிகுண்டா விமான நிலையம் சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதியினர் அங்கிருந்து விமானம் மூலம் விஜயவாடா சென்றனர்.