வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி செளத்ரி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தமிழ்நாட்டில் வெளியிட்டார்.
தமிழகத்தில் மட்டும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி ஷேர் தொகையாக கிடைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் விநியோகஸ்தர் ராகுல் ஆகியோர் விஜய்யை சந்தித்து கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதில் வெங்கட் பிரபு இல்லாதது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தற்போது வெங்கட் பிரபுவின் தங்கை வாசுகி பாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, “கேக் ஆர்டர் செய்யும் நேரத்தில் ‘கோட்’ படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு என்று அழைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.
நீங்கள் கொண்டாடும் ரூ.100 கோடிக்கு அவருக்கும் நிறைய பங்களிப்பு இருந்தது என்று நம்புகிறேன். எங்கள் அணி வீரர்களும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்” என்று வாசுகி பாஸ்கர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து வாசுகி பாஸ்கர் தனது பதிவை நீக்கியுள்ளார். இவர் தமிழ் திரையுலகில் முன்னணி ஆடை வடிவமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.