சென்னை : டிராகன் படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன், அதன்பிறகு ’லவ் டுடே’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய அவர் கதாநாயகனாகவும் நடித்து அசத்தியிருந்தார்.
அதேபோல ’ஓ மை கடவுளே’ என்ற காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, தன்னுடைய இரண்டாவது திரைப்படமாக ’டிராகன்’ படத்தை இயக்கியுள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் இணைந்திருக்கும் இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த வாரம் வெளிவந்த இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள நிலையில், வசூல் ரீதியாகவும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல படத்தின் கதாநாயகனான பிரதீப் ரங்கநாதனும் 100 கோடி ரூபாய் வசூல் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில், தற்போது டிராகன் திரைப்படமும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இதன்மூலம் கதாநாயகனாக நடித்த முதலிரண்டு படங்களிலுமே 100 கோடி ரூபாய் வசூலை கொடுத்து சாதனை படைத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.