சென்னை: ‘ரெட்ரோ’ படத்தின் தொடக்கத்தில் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி திரையரங்கில் சிறப்பான தருணமாக இருக்கும் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், ஸ்வாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய சூர்யா, “படத்தில் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி உள்ளது. இதில் நடனம், சண்டை, விவாதம் என அனைத்து படக்குழுவினரும் இதில் இருப்பார்கள். எமோஷனல் காட்சி. படத்தின் ஆரம்பத்திலேயே வரும். எனக்கு மிகவும் பிடித்த காட்சி இது. எங்கள் அனைவருக்கும் தியேட்டரில் இது மிகவும் சிறப்பான தருணமாக இருக்கும்” என்றார்.